SIRPI 75 A LIFE OF POETRY - நூல் வெளியீட்டு விழா

தமிழின் வளம் தமிழர் நலம் என்னும் குறிக்கோள்களை முன்னிறுத்தி கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்களால் தொடங்கப் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழ்நாட்டின் தனிப்பெருங் கவிஞர்களுள் ஒருவராகத் திகழும் கவிஞர் சிற்பி அவர்களின் 75 ஆம் ஆண்டு அகவை முடிவடைவதை ஒட்டி SIRPI 75 A LIFE OF POETRY என்னும் நூலினை வெளியிட்டு மகிழ்ந்தது. கவிஞர் சிற்பியின் படைப்புகள் குறித்து பல்வேறு அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலைப் பதிப்பித்தவர் சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகங்களின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ப. க. பொன்னுசாமி அவர்கள் ஆவார்.

தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வெளியீடாக வந்த இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கிச் சிறப்பித்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் விழாவிற்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார்கள். . இந்து நாளிதழின் முன்னை முதன்மை ஆசிரியர் திரு என். ராம் அவர்கள் நூலினை வெளியிட ராம்ராஜ் காட்டன் திரு கே. ஆர். நாகராஜன், திரு இயகாகோ சுப்பிரமணியம், விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம், டாக்டர் என். ஜி. பி. கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி ஆகியோர் நூலின் படிகளைப் பெற்றுச் சிறப்பித்தனர். ஊற்றெடுத்துச் செல்லும் கவிதைகளைப் படைத்த கவிஞர் சிற்பி அவர்களுக்கு தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் ஒரு இலக்கம் ரூபாய் பொற்கிழி அளித்துப் பாராட்டிப் பெருமைப் படுத்தினார். sirpi 75 a life of poetry என்னும் நூல் குறித்து புதிய தலைமுறை ஆசிரியர் திரு மாலன், முனைவர் கா. செல்லப்பன் ஆகியோர் மதிப்புரை வழங்கிச் சிறப்பித்தனர்.