அண்மைக்கால அகழ்வாய்வுகள்

தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் 27.07.2013 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் கா.ராஜன் அவர்களின் அண்மைக்கால அகழ்வாய்வுகள் என்னும் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. தொல்லியல் துறையில் வல்லுநரான இவர் தமிழ்நாட்டில் தாண்டிக்குடி, கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் நிகழ்த்திய அகழ்வாய்வுகள் குறித்த வரலாற்று உண்மைகளை விளக்கினார். குறிப்பாக ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்குத் தென்மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழ்வாய்வு குறித்தும், அகழ்வாய்வின் வழி கொடுமணல் பகுதி மக்கள் கி.மு. 400 முதலே இரும்பு எஃகு உருக்கி எடுத்தல், அரிய கல்மணிகள் செய்தல் முதலான தொழில்களை மேற்கொண்டதையும், மிகச் சிறந்த முறையில் விவசாயம் செய்து வாழ்ந்த நிலையையும், பிற நிலப்பகுதி மக்கள் மற்றும் கிரேக்க நாட்டு மக்களுடன் வணிகத் தொடர்பில் ஈடுபட்டிருந்ததையும் சான்றாதரங்களுடன் விளக்கினார்.

இந்நிகழ்விற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் புலவர் செ.இராசு அவர்கள் தலைமை தாங்கினார். பாரதியார் பல்கலைக் கழக முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்த, டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி. மணிகண்டன் நன்றி கூறினார். விழாவில், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, கோவையைச் சேர்ந்த சிறந்த தமிழறிஞர்கள், கோவை மருத்துவ மையத்தின் மருத்துவர்கள், டாக்டர் என்.ஜிபி. கல்வி நிறுவனங்களைச் சார்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.