தாயகம் கடந்த தமிழ் 2014
கோயம்புத்தூர், இந்தியா
ஜனவரி 20, 21,22

20 ஜனவரி 2014 திங்கள்
மாலை 5 மணி: தொடக்க விழா
21 ஜனவரி 2014, செவ்வாய்
காலை 9:30 மணி-11-30 மணி வரை: அமர்வு 1
தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம்

காலை 11:30-11:40: தேநீர்
காலை 11:40- மதியம்1:00: அமர்வு 2
தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்
மதியம் 1:00 முதல் 2:00: பகல் உணவு
மதியம் 2:00 முதல் 3:20 வரை: அமர்வு 3
புதிய சிறகுகள்
மதியம் 3:20மு தல் 3:30 வரை: தேநீர்
மதியம் 3:30 முதல் மாலை 5:00 வரை: அமர்வு 4
தொழில் நுட்பம் தரும் வாய்ப்புக்கள்
மாலை: 6:00 மணி: கலைநிகழ்ச்சிகள்
ஜனவரி 22 2014 புதன்கிழமை
காலை 9:30 முதல் 11:00 வரை: அமர்வு 5
தமிழ் கூறும் ஊடக உலகம்
காலை 11:00-11:10: தேநீர்
காலை 11:10- மதியம்1:00: அமர்வு 6
மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில்
மதியம் 1:00 முதல் 2:00: பகல் உணவு
மதியம் 2:00 முதல் 4:00 வரை: அமர்வு 7
தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி
மதியம் 4:00 முதல் 5:00 வரை: நிறைவு விழா

முனைவர் கிருஷ்ணன் மணியம் (மலேசியா)

மலேசியாவிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் கிருஷ்ணன் மணியம் . ஒப்பீட்டு இலக்கியம், நவீனத் தமிழ்இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், மலேசிய இந்தியச் சமூக வாழ்க்கை மற்றும் மலாய் இலக்கியம் ஆகியவற்றை ஆய்வுக் கோணத்தில் அணுகுபவர். சர்வதேச மாநாடுகளில் 50 கட்டுரைகளுக்கு மேல் அளித்துள்ள அவர் பல ஆய்வு நூல்களுக்கும் பங்களித்துள்ளார்.

திரு.நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்சு)

பிரான்சுநாட்டில், ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரில் வசித்துவரும் நாகரத்தினம் கிருஷ்ணாசமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு-ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா பெற்றவர் .

எழுத்துப்பணி: கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளென தீவிரமாக செயல்படுகிறவர். முனைவர் பிரெஞ்சுமொழி பேராசியர் ஒருவருடன் இணைந்து கடந்த ஓராண்டாக நடத்திவரும் இணையதளம் ஊடாக தமிழ்ச் சிறுகதைகளை பிரெஞ்சு மொழியில் வெளியிடுகிறார். திருமதி டொமினிக் வித்யாலு (Dominique Vityalou) என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் இணைந்து அம்பை சிறுகதைகளை, பிரான்சுநாட்டின் முக்கிய பதிப்பகங்களுள் ஒன்றான Zulma விற்காக மொழிபெயர்த்துவருகிறார். மொரீஷியஸ் தமிழரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட 'நீலக்கடல்' தமிழக அரசின் பரிசினையும், 'மாத்தாஹரி' என்ற நாவல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசையும், 'ருக்குமணியின் சபதம்' என்ற நகைச்சுவை சிறுகதை 'அப்புசாமி- அமுதசுரபி அறக்கட்டளை பரிசையும் வென்றவை.

திரு.மாலன் (இந்தியா)

எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும் கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன மாலன், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

இவரது கவிதைகள் சாகித்திய அகதாமி தொகுத்து வெளியிட்ட தொகுப்பிலும், எமெர்ஜென்சியை விமர்சித்து எழுதிய கவிதை, அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த கவிதைத் தொகுப்பிலும், கதைகள் கல்கத்தாவில் உள்ள writers workshop தொகுதியிலும் வெளியாகியுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி சீனம் மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன,இவரது நாவல் ஜனகணமன ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளி வந்துள்ளது.

பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ள இவரது சிறுகதை தப்புக் கணக்கு திரு. பாலு மகேந்திராவால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இலக்கியம் குறித்து உரைநிகழ்த்த அழைக்கப்பட்டவர்.சிங்கப்பூர் அரசு நிறுவனமான தேசிய கலைகள் நிறுவனம் அளிக்கும் தங்க முனை விருது, கனடா இலக்கியத் தோட்டம் அளிக்கும் வாழ்நாள் சாதனை விருது ஆகியவற்றின் நடுவராகப் பணியாற்ற அழைக்கப்பட்டவர்.

சிறுகதைகளின் வடிவ நேர்த்திக்காக படைப்பாளிகளாலும், பல்வேறு விமர்சகர்களாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவர்.. சாகித்திய அகதாமியால் அதன் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர்.

இவர் தமிழக ஆளுநர்களால் முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் Commonwealth Journalist Association, South Asian Literary Association ஆகியவற்றின் உறுப்பினர்.

முனைவர் சீதா லட்சுமி (சிங்கப்பூர்)

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். சிங்கப்பூரில் தமிழ் மொழியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர்தான் . கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தேசியக் கல்விக் கழகத்தில் தரமான பேச்சுத்தமிழ், பாடத்திட்ட மறுஆய்வு, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான தமிழ் ஆசிரியவியல், சமூகமொழியியல் ஆகிய துறைகளில் நிதியுதவியுடன் கூடிய ஆய்வுத் திட்டங்களைப் பிறருடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். உள்ளூர் மற்றும் அனைத்துலக மாநாடுகளில் 30க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார். தனியாகவும் பிறருடன் இணைந்தும் 10க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரும் வனிதாமணி சரவணனும் இணைந்து எழுதிய 'தரமான பேச்சுத்தமிழும் ஆசிரியவியலும்' என்ற ஆய்வு நூல் 2010ஆம் ஆண்டுக்கான ' கரிகாலன் விருதைப்' பெற்றது.

திரு.அ.முத்துலிங்கம் (கனடா)

இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் ஐ.நாவுக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அ.முத்துலிங்கம் இலங்கையின், கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தமிழர்.அறுபதுகளில் எழுத ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர் தமிழின் முக்கியமான எழுத்தாளர். இதுவரை 19 நூல்கள் எழுதியிருக்கிறார். இலங்கை அரசின் சாகித்தியப் பரிசு, தமிழ்நாடு அரசின் முதல் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை வென்றவர். நவீன வாழ்வின் கருணையையும் குரூரத்தையும் ஒரு சேரப் பேசும் இவரது படைப்புகளில் உலக மனிதர்களை சந்திக்கலாம்.

கவிஞர் முனைவர் சேரன் (கனடா)

கனடாவின் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சேரன், தமிழில் ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவருடைய ஆங்கில நாடகங்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவருடைய கவிதைகளும் பிற படைப்புகளும் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்வீடிஷ் ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் பிரபல ஆங்கில இலக்கிய இதழ்களில் வெளியாகியுள்ளன.அவை புகழ் கொண்ட பதிப்பகங்களால் நூலாகவும் வெளியாகியுள்ளன.

திருமதி.அனார் (இலங்கை)

தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதிவரும் அனார் . கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்து வாழ்ந்து வருபவர். 'ஓவியம் வரையாத தூரிகை' 'எனக்குக் கவிதை முகம்' 'உடல் பச்சை வானம்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவரது கவிதை மொழி தனித்துவமானது நவீனமானது 2008 இல் ஒரிசாவில் நிகழ்ந்த தெற்காசிய நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அவருடைய பல கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பல இதழ்களில் வந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாஹித்திய விருது, கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் கவிதை இயல் விருது, விஜய் தொலைக்காட்சியின், இலக்கியத்துறைக்கான சிகரம்தொட்ட சாதனைப் பெண் விருது எனப் பல அவருடைய நூல்கள், பல விருதுகள் பெற்றவர்.

பேரா.முனைவர் பெருந்தேவி (அமெரிக்கா)

அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் பெருந்தேவி தமிழில் மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுட அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசியராகப் பணியாற்றியவர். தெற்காசிய சமய மரபுகள், தொன்மம், ஆசிய நாகரீகங்கள், பெண்ணியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.

முனைவர் ரெ.கார்த்திகேசு (மலேசியா) - எழுத்தாளர்

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் விரிவுரையாளராகவும் பின் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்ட முனைவர் ரெ.கார்த்திகேசு மலேசியாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒலிபரப்பாளராகத் தம் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர் 60களிலும் 70களிலும் அறிவிப்பாளர், செய்தி வாசிப்பவர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். மலேசியா மற்றும் ஆசியாவின் ஒளிபரப்புத்துறை பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள், பல அனைத்துலக இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் வாசகர்களிடையே, ரெ கா என்று பிரபலமாகியிருக்கும் இவர் தமிழில் சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வுக் கட்டுரைகள் எனத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சில படைப்புகளுக்கு விருதுகளும் பெற்றுள்ளார்.கார்த்திகேசு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் , முதுகலை பட்டமும் , லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

திரு.முத்து நெடுமாறன் (மலேசியா)

மலேசியாவில் வசிக்கும் முத்து நெடுமாறன் தமிழ் மொழிக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் பெற்றவர் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பயன்படுத்தும் முரசு அஞ்சலும் செல்லினமும் கணினியிலும் கைத்தொலைபேசியிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கு அவர் உருவாக்கிய செயலிகள். இவருடைய படைப்புகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சுக்களினால் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைய மெக்கின்டாஷ் கணினியிலும் ஐ போனிலும் பயன்படுத்தப்படும் இந்திய, இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துருக்களை உருவாக்கியவர் முத்து. Knowledge Channels Synergy Sdn Bhd எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அவர், Sun Microsystems, Oracle Corporation போன்ற பெரிய நிறுவனங்களில் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தொழிநுட்ப மற்றும் சந்தைப்படுத்தும் பணிகளில் பணியாற்றியதோடு ஜாவா, வெப், கைத்தொலைபேசித் தொழில்நுட்பங்களிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்., மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னணுப் பொறியியலில் கணினிப் பொறியியலை முக்கியப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்றவர்.

திரு.இளைய அப்துல்லாஹ் (இங்கிலாந்து)

லண்டனில் வசித்து வரும் இளைய அப்துல்லா இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்,இலங்கையில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகைகளிலும் சுமார் 28 புலம் பெயர் பத்திரிகைகளிலும் இவரின் கவிதை, சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.

1996, 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் 2000ம் ஆண்டு லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பிய, பிரித்தானிய, மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றவர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ சிறீவர்த்தன விருது பெற்றவர்.

இளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.

செல்வி.கலைமகள் (சாவோ ஜியாங்)(சீனம்)

சீனத் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ள செல்வி சாவோ ஜியாங் சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப்பிரிவின் தலைவர். இவர் எழுதியுள்ள "சீனாவில் இன்ப உலா"என்னும் புத்தகம், ஒரு சீனர் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் மொழி புத்தகம் ஆகும். சென்ற ஆண்டு (2013) ஆம் சீனாவின் புகழ்பெற்ற சி.பி பதிப்பகத்திற்காக, "சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இந்த அகராதியில் சுமார் 27,000 சொற்கள் உள்ளன. தமிழர்கள் சீன மொழியைப் படிப்பதற்கு இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும், கலைமகளின் தலைமையில், சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் சேவையில் பெரும் முன்னேற்றங்களும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இப்பொழுது, சிற்றலை ஒலிபரப்பு, பண்பலை ஒலிபரப்பு மட்டுமல்லாமல், தமிழ் இணையதளம், கைப்பேசி இணையம், தமிழொலி என்னும் இதழ் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.

திரு. அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்)

சிங்கப்பூர் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் முத்திரை பதித்த திரு அழகிய பாண்டியன் தற்போது சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் துணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

1999ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உபகாரச் சம்பளத்துடன் ஊடகவியலில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்ட போது பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்தில் 4 மாதம் சேவையாற்றும் அரிய வாய்ப்பு பெற்றவர்.

சிங்கப்பூர் திரும்பியதும் தமிழ் வானொலியான ஒலி 96.8 அவரை வரவேற்றது. அடுத்த 5 ஆண்டுகளில் அவரது தலைமையின் கீழ் உள்ளூர், வெளியூர் விருதுகள் உட்பட பல உச்சங்களைத் தொட்டது தமிழ் வானொலி.

அவரது கைவண்ணத்தில் உருவான வரலாற்றில் இன்று, வானம் வசப்படுமே ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அவை புத்தகமாக வெளிவந்து சுமார் 10,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

திருமதி.வெற்றிச் செல்வி இராசமாணிக்கம் (அமெரிக்கா)

கலிபோர்னியா தமிழ் கழகம் என்று இவர் நிறுவிய அமைப்பின் வழி அமெரிககவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புலம் பெயர்ந்து வசிக்கும் 4000 குழந்தைகள் தமிழ் கற்கின்றனர். புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வகுத்து இந்த அமைப்பு தமிழ் கற்பிக்கிறது. இதன் காரணமாக ஒருதலைமுறைக் குழந்தைகளுடன் தமிழ் மரபு பேணப்பட்டு வந்துள்ளது.

10 நாடுகள் மற்றும் 5000 பேர் பங்கு கொண்ட உலகளாவிய 2012 -ல் புலம் பெயர்ந்த தமிழ்க் கல்வி மாநாட்டை 2012ல் நடத்தியவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் கட்டுரைகைளத் தொகுத்து "கலைஞர் களஞ்சியம்" என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார்.

திரு.அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா)

மருந்தாக்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 35 ஆண்டுகளுக்குமேல் மருந்து உற்பத்தித்தொழில் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று, இருபது ஆண்டுகளாகச் சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வலராக தொண்டு புரிந்து வருகிறார். இதில் 13 ஆண்டுகள் பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளின் ஹோல்ஸ்வொர்தி கிளைக்கு முதல்வராகவும், தற்போது அப்பள்ளியின் ஆலோசகராவும் இருந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக்குழுவில் 15 ஆண்டுகளாக பங்குபற்றி தமிழ்பாடப் புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் பல நடத்தி வருவதுடன்,2012-ஆம்ஆண்டு கலிபோர்னியா தமிழ்க்கல்விக் கழகமாநாட்டில் ஆசிரியர்களுக்கு ஒரு பயிலரங்கும் நடத்தியுள்ளார்.

மலேசியாவில் 2013-ஆம் ஆண்டு நடந்த 10-ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் "சிறார்க்குத்தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்" பற்றிய கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறர்.தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் மாணவர்களுக்குப் பயன்படும் பல பயிற்சிகளைத் தன்னுடைய இணையத்தளத்தில் (www.anbujaya.com) வெளியிட்டு வருகிறார். மதுரைத் திட்டத்தில் (Project Madurai) பங்கெடுத்து 2000 பக்கங்களுக்கு மேல் தட்டச்சு செய்தும் பிழை திருத்தியும் பணி செய்திருக்கிறார். அவ்வப்போது கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார்.

கவிஞர் இரா. மீனாட்சி (இந்தியா)

உலக நகரமான ஆரோவில்லில் வசித்து வரும் இரா.மீனாட்சி அவரது கவிதைகளுக்காக தமிழ் இலக்கிய உலகில் மட்டுமன்றி உலக அளவில் கவனம் பெற்றவர். 4000 ஆண்டுகளாக உலகில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு வரும் கவிதைகளிலிருந்து 1600 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நியூயார்க் நகரில் உள்ள W.W.Norton & Company என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள உலகக் கவிதைகள் என்ற நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அந்த நூலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ள 20ம் நூற்றாண்டுக் கவிஞர்கள் ஐவர்தான். அவர்களில் இவரும் ஒருவர். இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, புகழ் பெற்ற பெங்குவின் நிறுவனம் வெளியிட்டுள்ள 'The Women poets of India' 'The New Writing in India'. ஆகிய நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் .தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு உள்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளன.

திரு.இந்திரன் (இந்தியா)

சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதினை பெற்றவர். தமிழகத்தின் மிக முக்கிய கலை விமர்சகர். கவிஞர் மொழிபெயர்ப்பாளர். ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதுபவர். 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர்.

திரு.ச.பொன்னுத்துரை (ஆஸ்திரேலியா)

எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கையிலும் நைசீரியாவிலும் ஆசிரியராகப் பணிபுந்தார். ஈழத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். 1990 முதல் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று மொழிபெயர்த்துள்ளார்.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

கவிஞர் புவியரசு (இந்தியா)

மொழிபெயர்ப்பிற்காகவும், கவிதைத் தொகுதிக்காகவும் இரு சாகித்திய அகதாமி பரிசு பெற்ற புவியரசு, தமிழின் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தில் சமூக அக்கறையை வெளிப்படுத்திய வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தமிழ்மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறை சென்றவர். மார்க்சியவாதி தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார்.ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சில கவிதைகள் ஆங்கிலம், ரஷ்ய,ஹங்கேரி மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும்ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

முனைவர் உல்ரிகே நிகோலஸ் (ஜெர்மனி)

ஜெர்மனியில் கோலோன் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய, தென்கிழக்காசிய ஆய்வுத் துறையின் தலைவரும், இந்தியவியல்துறைப் பேராசியருமான உல்ரிக்கே நிகோலஸ் முத்தொள்ளாயிரத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் தொல்காப்பியத்தின் செய்யுளியல், அணி இலக்கணம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்ந்தவர். அதேபோல் தொல்காப்பியத்தின் உவமையியலை, வடமொழி நூலான தண்டியின் அலங்கார சாஸ்திரத்துடன் ஒப்பாய்வு செய்தவர் மத்திய அரசின் கல்வித் தொகை பெற்ற ஆய்வாளராக, தமிழ்ப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகங்களிலும், புதுவை தூரக்கிழக்கு பிரஞ்சுப் பள்ளியிலும் பணியாற்ற பெற்ற வாய்ப்பால் தமிழகத்தில் சில காலம் வசித்தவர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

முனைவர் க. செல்லப்பன் (இந்தியா)

பல ஆங்கில பேராசிரியர்கள் உருவாக்கிய பெருமை கொண்ட பேராசிரியர் க. செல்லப்பன், பெருமை கொள்வது புகழ் வாய்ந்த தமிழறிஞர், பேராசிரியர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் என்பதில்தான். இங்கிலாந்தில் உள்ள ஆங்கில மொழிப் பயிற்று நிறுவனமான ELT ஆல் பயிற்றுவிக்கப்பட்டார், ஓப்பீட்டு இலக்கியம், காமன்வெல்த் நாடுகளின் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 23 நூல்கள் எழுதியுள்ள செல்லப்பன் சிறந்த பேச்சாளரும் கூட.

திரு.திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா)

பதினைந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் திருமூர்த்தி ரங்கநாதன் டிஜிட்டல் மாக்சிம் என்ற நிறுவனத்தின் நிறுவனத் தலைவர். டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்டு தமிழை வளர்க்க வேண்டும் என்ற அவாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆற்றிய பணியைத் துறந்து இந்த நிறுவனத்தைத் துவக்கினார். தமிழில் மின் நூல்களை வெளியிடுவதில் முன்னோடியான அவர் கனடா டொரொண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பெரண்டா பெக், பென்சில்வேனியா பலகலைக்கழகப் பேராசியர் வாசு ரங்கநாதன் ஆகியோரின் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டுள்ளார். இவரது மின்னூல்கள் அமெரிக்க, கனடா பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. திருமதி வைதேகி ஹெர்பர்ட்ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள சங்க இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் முனைவர் அ. வீரமணி, (ஜப்பான்)

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில்முனைவர் பட்டமும்பெற்ற பேராசிரியர் மணி தற்சமயம் ஜப்பானின் இரிட்சுமேய்க்கான் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சிங்கப்பூர் தென்கிழக்காசிய ஆய்வுக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், புரூணை தாரூசலாம் பல்கலைக்கழகம் முதலானவற்றில் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் மொழி ஆர்வமும், கல்வியும் பெற மாணவர்களை ஒருங்கிணைத்து இவர் நடத்திய அமைப்பு முக்கிய காரணியாக அமைந்தது. வடசுமத்திராவில் தமிழர்கள், பாவலர் நெஞ்சம், சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை: தென்கிழக்காசியவில் சோழர்களின் கடற்பயணங்கள் என்பவை இவர் தமிழில் எழுதியுள்ள நூல்களில் சில . தமிழுக்காக பல ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி பல தொகுப்பு நூல்களையும், பிற எழுத்தாளார்களின் படைப்புக்களை நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.

முனைவர் பத்ரி சேஷாத்ரி (இந்தியா)

அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிகல் எஞ்சினியரிங் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்ற பத்ரி சேஷாத்ரி கிரிக்கின்ஃபோ என்ற இணையத்தளத்தைப் பிறருடன் சேர்ந்து உருவாக்கினார். 2005-ம் ஆண்டு வரை இவர் அந்த நிறுவனத்தை வழிநடத்தினார். 2004-ம் ஆண்டில் தமிழில் புத்தகங்களைப் பதிப்பிக்கும் கிழக்கு பதிப்பகம் என்ற நிறுவனத்தை தோற்றுவித்து இதுவரை சுமார் 2,000 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார் ஆழம் என்ற மாதப்பத்திரிகையை நடத்துகிறார். இதுவரை எட்டு புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். நான்கு புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்., தாய்மொழிக் கல்வி, அறிவியல் கல்வி ஆகியவற்றில் பெரும் நாட்டம் கொண்டவர்.

டாக்டர் மா. சண்முக சிவா (மலேசியா)

மலேசியாவிலுள்ள கெடா மாநிலம் அலோர் ஸ்டாரில் பிறந்த சண்முக சிவா மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற தொழில் முறை மருத்துவர். அயர்லாந்தில் தொழிலியல் மருத்துவமும், ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா பல்கலைக்கழகத்தில் சரும நோய்க்கான பட்ட மேற்படிப்பையும் படித்தவர். "வீடும் விழுதுகளும்" என்ற சிறுகதைத் தொகுப்பும் "விழி வாசல் வழியே" என்ற கட்டுரைத் தொகுப்புகள் இவரது குறிப்பிடத் தக்க நூல்கள் மை ஸ்கில் அறவாரியத்தின் இயக்குனராகவும், ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் "நலமுடன் வாழ்வோம்" என்னும் நிகழ்ச்சியின் நடத்துநராகவும் செயல்பட்டு வருகின்றார். இளம் கைதிகள் மறுவாழ்வு மையம் என்னும் அமைப்பின் வழி சிறைச்சாலையில் உள்ளவர்களை அறப்பணியில் ஈடுபடுத்தி வருகின்றார்.

திரு.மா.லெனின் தங்கப்பா (இந்தியா)

குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.இலெ.தங்கப்பா ஒரு தமிழறிஞர், தனித்தமிழ் உணர்வு மிக்கவர். புதுச்சேரி அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது ஆந்தைப்பாட்டு மிக முக்கியமான பகடி இலக்கியமாகும் சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் 'LOVE STANDS ALONE' என்று இவர் மொழிபெயர்தளித்துள்ள நூலை சிறந்த ஆங்கில பதிப்பகமான பென்குயின் பதிப்பகம் வெளியீட்டுள்ளது அவர் எழுதியுள்ள நூல்களில் இயற்கை ஆற்றுப்படை, எது வாழ்க்கை?, கொடுத்தலே வாழ்க்கை ஆகியவையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கவிஞர் முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் (இந்தியா)

மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர். கவிதை, இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் படைப்புகளைக் கொடுத்து வருபவர். படைப்பும், பதிப்பும் இவரது தலையாய பணிகள்.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர்), சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) பணியாற்றியவர். தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருகின்றார்.

பேரா.ப.மருதநாயகம் (இந்தியா)

ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்க ஹவாயி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களும் தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காக ஆங்கிலத்தில் முனைவர் பட்டமும், தெ.பொ.மீ. பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும், "தமிழின் தலைசிறந்த இலக்கியங்கள்: ஒப்பியல் பார்வை" என்ற ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவை நடுவண் பல்கலைக் கழகத்தின் முதல் டி.லிட். பட்டமும் பெற்றவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலப் பேராசிரியராகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கடமை ஆற்றியுள்ளார். புதுவைப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றபின் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார். கடந்த ஆறாண்டுகளாகச் செம்மொழி. கனடாவின் கார்ல்டன் பல்கலைக்கழகம், பிரெஞ்சு ரென்-2 பல்கலைக்கழகம், ரீயூனியன் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துப் பாட்லியன் நூலகம், ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். சாகித்திய அகாடெமி போன்ற நிறுவனங்கள் பதிப்பித்த தொகுதிகளில் இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தமிழ்க்கவிதைகளும் கட்டுரைகளும் நாவல் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

முனைவர் ப.க.பொன்னுசாமி (இந்தியா)

இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற . முனைவர் ப.க.பொன்னுசாமி சிறந்த கல்வியாளர், அறிவியல் அறிஞர், இலக்கியப் படைப்பாளி. சென்னைப் பல்கலைகழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைகழகத்திலும், துணைவேந்தராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். தேசிய அளவில் மத்திய, மாநில கல்விக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்தவர்.

தமிழியல், அறிவியல், கல்விப் பற்றிப் பல நூல்களைப் படைத்தவர். கொங்கு மண் சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளைப் படுகளம் என்னும் தம்முடைய புதினத்தின் வழிப் பதிவு செய்தவர். மக்களின் வாழ்வியல் விழுமியங்களைச் சிறுகதைகளாகவும் மிளிரச் செய்பவர். நெடுஞ்சாலை விளக்குகள் என்னும் தம் அண்மைப் புதினத்தின் வழி ஆராய்ச்சியுலக அனுபவங்களை ஆழமாகச் சித்திரித்தவர். பொன் நாவரசு அறக்கட்டளையை நிறுவி, சமுக, கல்விப் பணிகளை மேற்கொண்டு வருபவர். தமிழக அரசின் பல்கலைகழக நல்லாசிரியர் விருது பெற்றவர்.

டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் (இந்தியா)

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர் திருப்பூர் கிருஷ்ணன். தொடக்கத்தில் அமரர் நா. பார்த்தசாரதியின் தீபம் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். பின் தினமணியில் கால் நூற்றாண்டுக் காலம் முதல்நிலைத் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார். அம்பலம், சென்னை ஆன்லைன் ஆகிய இணைய இதழ்களில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். தற்போது அமுத சுரபி மாத இதழின் ஆசிரியர். முழு நேர எழுத்தாளர், பேச்சாளர், இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவாளர். தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் நிகழ்ச்சி வழங்கி வருபவர். பல்வேறு இதழ்களில் தொடர்கள் எழுதி வருகின்றார். தம் படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை விருது, பாஞ்சஜன்யம் விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, லில்லி தேவசிகாமணி விருது, ஆனந்த விகடன் முத்திரைக் கதைப் பரிசு ( இரண்டு முறை ), கலைமகள் சிறுகதைப் போட்டி முதல்பரிசு போன்ற பல பெருமைகள் பெற்றவர். அகில இந்தியா வானொலி நடத்திய தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டியில் தமது மரபுக் கவிதைக்காக முதல் பரிசு பெற்றவர். இவரது 'சிவப்பாய் சில மல்லிகைகள்', பட்டொளி வீசி ஆகிய சிறுகதைத் தொகுதிகள், கோதை நாயகியின் இலக்கியப் பாதை, நா. பா. வின் வாழ்வும் பணியும் ஆகிய வாழ்க்கை வரலாறுகள், அரவிந்த அமுதம், ஸ்ரீ அன்னை, நளசரிதம், அபூர்வ ராமாயணம் முதலிய ஆன்மீக நூல்கள், சுவடுகள் இலக்கிய முன்னோடிகள் போன்ற தற்கால இலக்கியவாதிகள் குறித்த நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவரது சிறுகதைகள் மகரம், பெருமாள் முருகன், சிவசங்கரி, விட்டல் ராவ், அழகிய சிங்கர் போன்றோர் தொகுத்த தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. ஞானபீடத் தொகுப்பிலும், நேஷனல் புக் டிரஸ்ட் தொகுப்பிலும் இவரது சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் (இந்தியா)

ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஜெயந்தஸ்ரீ கல்வியியலும் முதுநிலைப் பட்டம் பெற்றவர் முப்பது ஆண்டுகாலம் கல்லூரியில் போதித்த அனுபவம் வாய்ந்த அவர் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஆங்கிலத்தில் குறுந்தொகையை மொழிபெயர்க அமைத்துள்ள ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் மிகச் சிறந்த பேச்சளார், நல்ல கவிஞர், எழுத்தாளர். மாணவராக இருந்த போது திசைகள் வார இதழின் ஆசிரியர் குழுவில் எழுதத்துவங்கிய இவர் சிறந்த சிறுகதை ஆசிரியர் என ஆனந்த விகடனின் பரிசு பெற்றவர்.

முனைவர் பொன்னவைக்கோ (இந்தியா)

தற்போது SRM பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணி செய்துவரும் முனைவர் பொன்னவைக்கோ. திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் மேநாள் துணைவேந்தர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றிய அவர் தில்லி Iஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) முனைவர் பட்டம் பெற்றவர். இன்று அண்ணாப் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் கிண்டி பொறியியற் கல்லூரியில் பயின்றபோது, 'தமிழ் மன்றச் செயலாளராகப் பணியாற்றி 4000 அறிவியல், பொறியியல் கலைச்சொற்கள் அடங்கிய கலைச்சொல்' தொகுப்பினை 1969 இல் தமிழ்மன்ற வெளியீடாக வெளியிட்டுள்ளார். பல அறிவியல் கட்டுரைகளை, கலைக்கதிர், தென்மொழி இதழ்களில் வெளியிட்டுள்ளார் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து சுசர்லாந்து இத்தாலி மால்டா. லிபியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா சப்பான், தென்ஆப்பிரிக்கா மரூசியசு, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தாய்வான், சீனா, ஜெர்மனி, கானா, நெதர்லாந்து எனப் 21 நாடுகளுக்குப் பணிநிமித்தம் சென்று வந்துள்ள பொன்னவைக்கோ அறிந்த மொழிகள் 9. என்றாலும் தமிழ் மொழி மீது தனிக் காதல் கொண்டவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது அங்கு தமிழை ஆட்சி மொழியாகவும், பேச்சு மொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆக்கி, வழிபாட்டு மொழியைத் தமிழாக்க அருட்சுனைஞர் பட்டயப்படிபைத் தொடங்கியவர் ஐநா அமைப்போடு இணைந்த International Association of Educators for World Peace, வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

திரு. பெ.இராஜேந்திரன் (மலேசியா)

உலகின் சிறந்த தமிழ்ச் சங்கம் என்ற விருதினை 2013ம் ஆண்டு தமிழ் வளர்சித்துறை செயலரிடமிருந்து பெற்ற தாண்டு காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் பெ.இராஜேந்திரன். 1981ம் ஆண்டு பத்திரிகையாளராகத் தன் எழுத்துலகப் பயணத்தைத் துவக்கியபெ.இராஜேந்திரன், மக்கள் ஓசை இதழின் ஆசிரியர். 'செலாஞ்சார் அம்பாட்" என்னும் நிலக்குடியேற்றத்திட்டத்தில் 46 தோட்டத்தொழிலாளர் குடும்பங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவகாரத்தை இராஜேந்திரன் அம்பலப்படுத்தியதையடுத்து அந்தக் குடும்பங்களுக்கு மறுவாழ்வும், அவர்களை அடிமைகளாக நடத்தியவர்களுக்கு பத்தாண்டுகாலச் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன.

மலேசியத் தமிழ் ஆசிரியர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி பெற இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மலேசியாவில் தமிழ்க் கல்வி நிலைபெறக் காரணமாயின.