தாயகம் கடந்த தமிழ் 2014
கோயம்புத்தூர், இந்தியா
ஜனவரி 20, 21,22

புரவலர்  

டாக்டர் நல்ல பழனிசாமி

டாக்டர் நல்ல பழனிசாமி சிறந்த மருத்துவர், கல்வியாளர், சமூக ஆர்வலர், தலைசிறந்த தமிழ்ப் பற்றாளர். தமிழகத்தின் தொழில் நகரான கோவை மாநகரில் கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையம் என்னும் பல்துறை மருத்துவமனையைத் தொடங்கி கோவைக்கு மருத்துவ மகுடம் சூட்டியவர். மருத்துவத் தொண்டோடு, டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமத்தினைத் தொடங்கிக் கல்விப் பணியையும் செய்து கொண்டிருப்பவர். அனுவாவி சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலிலும் மருதமலை முருகன் திருக்கோயிலிலும் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்து அரும் திருப்பணிகளைச் செய்தவர்.

இவர்தம் பணிகளைப் பாராட்டி கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் 2011 ஆம் ஆண்டு இவருக்கு மதிப்புறு முனைவர் (Honorary D.Sc.) பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 2012-ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தது. கோவை சுழற்சங்கம் பொதுத் தொண்டுக்கான தன்னுடைய உயரிய கேலக்ஸி கௌரவ விருதினை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் வளர்ச்சி/மேம்பாட்டுக்கென்று ஓர் அமைப்பை உருவாக்கி நற்பணிகள் ஆற்றிட வேண்டும் என்னும் இவருடைய தனியா ஆர்வத்தின் அடையாளமே உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்.

ஆலோசகர்கள்

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர். கவிதை, இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் படைப்புகளைக் கொடுத்து வருபவர். படைப்பும், பதிப்பும் இவரது தலையாய பணிகள்.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர்), சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) பணியாற்றியவர். தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருகின்றார்.

முனைவர் ப.க.பொன்னுசாமி

இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற . முனைவர் ப.க.பொன்னுசாமி சிறந்த கல்வியாளர், அறிவியல் அறிஞர், இலக்கியப் படைப்பாளி. சென்னைப் பல்கலைகழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைகழகத்திலும், துணைவேந்தராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். தேசிய அளவில் மத்திய, மாநில கல்விக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்தவர்.

தமிழியல், அறிவியல், கல்விப் பற்றிப் பல நூல்களைப் படைத்தவர். கொங்கு மண் சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளைப் படுகளம் என்னும் தம்முடைய புதினத்தின் வழிப் பதிவு செய்தவர். மக்களின் வாழ்வியல் விழுமியங்களைச் சிறுகதைகளாகவும் மிளிரச் செய்பவர். நெடுஞ்சாலை விளக்குகள் என்னும் தம் அண்மைப் புதினத்தின் வழி ஆராய்ச்சியுலக அனுபவங்களை ஆழமாகச் சித்திரித்தவர். பொன் நாவரசு அறக்கட்டளையை நிறுவி, சமுக, கல்விப் பணிகளை மேற்கொண்டு வருபவர். தமிழக அரசின் பல்கலைகழக நல்லாசிரியர் விருது பெற்றவர்.

திரு.மாலன் - தலைவர் அமைப்புக் குழு

எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும் கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன மாலன், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.

இவரது கவிதைகள் சாகித்திய அகதாமி தொகுத்து வெளியிட்ட தொகுப்பிலும், எமெர்ஜென்சியை விமர்சித்து எழுதிய கவிதை, அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த கவிதைத் தொகுப்பிலும், கதைகள் கல்கத்தாவில் உள்ள writers workshop தொகுதியிலும் வெளியாகியுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி சீனம் மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன,இவரது நாவல் ஜனகணமன ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளி வந்துள்ளது.

பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ள இவரது சிறுகதை தப்புக் கணக்கு திரு. பாலு மகேந்திராவால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய மெல்பேர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இலக்கியம் குறித்து உரைநிகழ்த்த அழைக்கப்பட்டவர்.சிங்கப்பூர் அரசு நிறுவனமான தேசிய கலைகள் நிறுவனம் அளிக்கும் தங்க முனை விருது, கனடா இலக்கியத் தோட்டம் அளிக்கும் வாழ்நாள் சாதனை விருது ஆகியவற்றின் நடுவராகப் பணியாற்ற அழைக்கப்பட்டவர்.

சிறுகதைகளின் வடிவ நேர்த்திக்காக படைப்பாளிகளாலும், பல்வேறு விமர்சகர்களாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவர்.. சாகித்திய அகதாமியால் அதன் தமிழ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். இவர் தமிழக ஆளுநர்களால் முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் Commonwealth Journalist Association, South Asian Literary Association ஆகியவற்றின் உறுப்பினர்.

முனைவர் ரெ கார்த்திகேசு (மலேசியா)

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் விரிவுரையாளராகவும் பின் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்ட முனைவர் ரெ.கார்த்திகேசு மலேசியாவில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒலிபரப்பாளராகத் தம் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர் 60களிலும் 70களிலும் அறிவிப்பாளர், செய்தி வாசிப்பவர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். மலேசியா மற்றும் ஆசியாவின் ஒளிபரப்புத்துறை பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள், பல அனைத்துலக இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் வாசகர்களிடையே, ரெ கா என்று பிரபலமாகியிருக்கும் இவர் தமிழில் சிறுகதைகள், நாவல்கள், திறனாய்வுக் கட்டுரைகள் எனத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். சில படைப்புகளுக்கு விருதுகளும் பெற்றுள்ளார்.கார்த்திகேசு, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் , முதுகலை பட்டமும் , லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

கவிஞர் சேரன் (கனடா)

கனடாவின் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சேரன், தமிழில் ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவருடைய ஆங்கில நாடகங்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவருடைய கவிதைகளும் பிற படைப்புகளும் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்வீடிஷ் ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் பிரபல ஆங்கில இலக்கிய இதழ்களில் வெளியாகியுள்ளன.அவை புகழ் கொண்ட பதிப்பகங்களால் நூலாகவும் வெளியாகியுள்ளன.

திரு. நாகரத்தினம் கிருஷ்ணா

பிரான்சுநாட்டில், ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரில் வசித்துவரும் நாகரத்தினம் கிருஷ்ணாசமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு-ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா.பெற்றவர்

எழுத்துப்பணி: கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளென தீவிரமாக செயல்படுகிறவர். முனைவர் பிரெஞ்சுமொழி பேராசியர் ஒருவருடன் இணைந்து கடந்த ஓராண்டாக நடத்திவரும் இணையதளம் ஊடாக தமிழ்ச் சிறுகதைகளை பிரெஞ்சு மொழியில் வெளியிடுகிறார். திருமதி டொமினிக் வித்யாலு (Dominique Vityalou) என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருடன் இணைந்து அம்பை சிறுகதைகளை, பிரான்சுநாட்டின் முக்கிய பதிப்பகங்களுள் ஒன்றான Zulma விற்காக மொழிபெயர்த்துவருகிறார். மொரீஷியஸ் தமிழரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட 'நீலக்கடல்' தமிழக அரசின் பரிசினையும், 'மாத்தாஹரி' என்ற நாவல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசையும், 'ருக்குமணியின் சபதம்' என்ற நகைச்சுவை சிறுகதை 'அப்புசாமி- அமுதசுரபி அறக்கட்டளை பரிசையும் வென்றவை.

கவிஞர் இந்திரன் (இராசேந்திரன்)

சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதினை பெற்றவர். தமிழகத்தின் மிக முக்கிய கலை விமர்சகர். கவிஞர் மொழிபெயர்ப்பாளர். ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதுபவர். 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர்.