தமிழ்ப் பண்பாட்டு மையத் தொடக்க விழா

கோவை, காளப்பட்டி சாலை டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மார்ச் 19 ஆம் நாள் செவ்வாய்கிழமை அன்று உயர்தனி செம்மொழியாம் தமிழை உலகம் போற்றிடச் செய்ய கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்களால் தொடங்கப்பட்டது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம். தமிழ்ப் பண்பாட்டு தொடக்க விழாவிற்கு இந்தியா பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் தலைமையேற்க, திரையுலக மார்க்கண்டேயர் நடிகர் சிவக்குமார் மையத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை வழங்கினார்.

இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துதல், தமிழ் வளம் பெருக்கும் நூல்களை வெளியிடுதல். ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறை அறிஞர்/படைப்பாளி ஒருவர் என மூவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு முறையே ஒரு இலட்சம் பொற்கிழியும், விருதும் வழங்குதல் ஆகியன இத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் உயரிய நோக்கமாகும். இத்தகு உயரிய முயற்சிக்கு உறுதுணையாக முதுபெரும் தமிழ்ச் சான்றோர்கள் துணை நின்றனர். 'செல்வத்துப் பயனே ஈதல்' எனும் வரிக்கொப்ப பொருள் தமிழுக்கென்றே ஆகுதல் வேண்டும் என்ற குறிக்கோளினைத் தன்னகத்தே கொண்டு செயல்படுபவர் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி. இவரின் எண்ணத்திற்கேற்ப உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் செயல் வடிவம் கொள்கிறது.

ஆகவே தான் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்படும் விருதுகள் கூட மொழியின் வளர்ச்சியில் பண்பாட்டினை எடுத்து கூறும் முதுபெரும் தமிழறிஞர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களாய் விளங்கும் இளைய தலைமுறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கப் பெற்ற 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் நாள் கரிசல்காட்டு எழுத்தாளரும் முதுபெரும் தமிழ்ப் படைப்பாளியும் ஆகிய கி.இராஜநாராயணன், முதுபெரும் பேராசிரியர் திறனாய்வாளர் ஓய்விலும் ஆய்வையே தனதாக கொண்ட கா.மீனாட்சிசுந்தரம், மானுடம் பாடும் வானம்பாடி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகிய மூவருக்கு ஒரு லட்சம் பொற்கிழி, விருது, பாராட்டுப் பத்திரம் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கபட்டது.

இத்தகு சிறந்த விழாவில், 'இந்து'நாளேட்டின் முன்னை முதன்மைப் பதிப்பாசிரியர் திரு.என்.ராம், முதுபெரும் பேராசிரியர் கா.செல்லப்பன், புதிய தலைமுறை இதழின் ஆசிரியர் திரு.மாலன், தொழிலதிபர்கள் இயகாகோ. சுப்பிரமணியம், ராம்ராஜ் காட்டன்ஸ் கே.ஆர்.நாகராஜன், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.